Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
மாமல்லபுரத்தில் பழைய பல்லவ சக்கரவர்த்திகளின் மாளிகை ஒன்றில் அன்றிரவு அம்மூன்று வீரசிகாமணிகளும் தங்கினார்கள். இரவு உணவு அருந்தியானதும் மலையமான் அரசர் ஐந்து ரதங்களுக்கு அருகில் அரவான் கதை நடக்கிறது என்று கேள்விப்பட்டு அதைக் கேட்கப் போய் விட்டார். ஆதித்த கரிகாலனும் பார்த்திபேந்திரனும் அரண்மனை மேல் மாடத்துக்குச் சென்றார்கள்.
மேல்மாடத்திலிருந்து ஆதித்த கரிகாலன் மாமல்லபுரத்தின் இரவுத் தோற்றத்தைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். ஆங்காங்கு மினுக்கு மினுக்கு என்று சில தீபங்கள் மங்கலாகப் பிரகாசித்தன. வீதிகளில் பெரும்பாலும் நிசப்தம் குடிகொண்டிருந்தது. கோவில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்து வெளிக் கதவுகளைச் சாத்திக் கொண்டிருந்தார்கள். சமுத்திரத்தின் கோஷம் ‘ஓ’ வென்று சோகத் தொனியாகக் கேட்டது.ஐந்து ரதங்களுக்குப் பக்கத்தில் வில்லுப்பாட்டு வித்வானும் அவருடைய கோஷ்டியும் அரவான் கதை நடத்த, அவர்களைச் சூழ்ந்து கதை கேட்டுக் கொண்டிருந்த ஜனக் கூட்டம் தீவர்த்திகளின் ஒளியில் கரிய நிழல் உருவங்களாகத் தெரிந்தனர்.
“இந்த முதிர்ந்த வயதில் கிழவர் கதை கேட்கப் போய் விட்டார், பார்! என்ன இருந்தாலும் பழைய காலத்து மனிதர்கள்தான் மனிதர்கள்! அவர்களுடைய உடல் வலிமையும் மனோதிடமும் இந்த நாளில் யாருக்கு உண்டு?” என்றான் ஆதித்த கரிகாலன்.