அத்தியாயம் 18 – துரோகத்தில் எது கொடியது? (PS-2)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்தைப் படித்தவர்கள் அந்நாளில் பெண்மணிகள் பலர் சமூக வாழ்வின் முன்னணியில் இருந்திருப்பதை அறிவார்கள். மன்னர் குலத்தில் பிறந்த மாதரசிகள் மிகவும் கௌரவிக்கப்பட்டார்கள். சோழ குலத்தில் பிறந்த பெண்மணிகளும் வாழ்க்கைப்பட்ட பெண்மணிகளும் சொந்தமாகச் சொத்துரிமை பெற்றிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் தரவாரியாகக் கிராமங்களும், நன்செய் புன்செய் நிலங்களும், கால்நடைச் செல்வமும் இருந்தன. இந்த உடைமைகளை அவர்கள் எவ்வாறு உபயோகித்தார்கள் என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். பலர் ஆலயங்களில் தங்கள் பெயரால் பலவிதத் திருப்பணிகள் நடைபெறுவதற்குச் சொத்துக்களை உபயோகப்படுத்தினார்கள். திருவிளக்கு ஏற்றுதல் திருமாலை புனைந்து சாற்றுதல், தேசாந்திரிகளுக்கும் சிவனடியார்களுக்கும் திரு அமுது செய்வித்தல் – ஆகியவற்றுக்குப் பல அரசகுல மாதர்கள் நிவந்தங்கள் ஏற்படுத்திச் சிலாசாஸனம் அல்லது செப்புப் பட்டயத்தில் அவற்றைப் பொறிக்கும்படி செய்தார்கள்.

அரண்மனைப் பெண்டிர் ஆலயத் திருப்பணி செய்தல் அந்த நாளில் பொது வழக்காயிருந்திருக்க, சுந்தர சோழரின் அருமைப் புதல்வி குந்தவைப் பிராட்டி மட்டும் வேறொரு வகை அறத்துக்குத் தம் உடைமைகளைப் பயன்படுத்தினார். நோய்ப்பட்டிருந்த தம் தந்தையின் நிலையைக் கண்டு இரங்கியதனால்தானோ, என்னமோ, அவருக்கு நாடெங்கும் தர்ம வைத்திய சாலைகளை நிறுவ வேண்டும் என்னும் ஆர்வம் உண்டாயிற்று. பழையாறையில் பராந்தக சக்கரவர்த்தியின் பெயரால் ஓர் ஆதுரசாலை ஏற்படுத்தியிருந்ததை முன்னமே பார்த்தோம். அது போலவே தஞ்சையில் தன் தந்தையின் பெயரால் ஆதுரசாலை அமைப்பதற்குக் குந்தவை தேவி ஏற்பாடு செய்திருந்தார். இந்த விஜயதசமி தினத்தில் அந்த ஆதுரசாலையை ஆரம்பிக்கவும் அதற்குரியதான சாஸனங்களை எழுதிக் கொடுக்கவும் ஏற்பாடாகியிருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *