Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
கொல்லன் சிறிது நேரம் தன் வேலையிலேயே கவனமாயிருந்தான். வந்தியத்தேவன் இரண்டு மூன்று தடவை கனைத்த பிறகு நிமிர்ந்து பார்த்தான்.
“யார், அப்பனே, நீ! உனக்கு என்ன செய்ய வேண்டும்? வாள், வேல் ஏதாவது வேண்டுமா? வாளுக்கும் வேலுக்குந்தான் இப்போதெல்லாம் தேவையில்லாமல் போய்விட்டதே? நீ வாளுக்கு எங்கே வந்திருக்கப் போகிறாய்?” என்றான் கொல்லன்.
“என்ன ஐயா, இவ்வாறு சொல்கிறீர்? உம்முடைய கையில் வாளை வைத்து வேலை செய்து கொண்டே வாளுக்குத் தேவையில்லையென்கிறீரே?” என்றான் வந்தியத்தேவன்.
“இது ஏதோ அபூர்வமாக வந்த வேலை; பழைய வாளைச் செப்பனிடுவதற்காகக் கொண்டு வந்தார்கள். சில வருஷங்களுக்கு முன்னால் பாண்டிய நாட்டுப் போரும், வட பெண்ணைப் போரும் நடந்து கொண்டிருந்தபோது இந்தப் பட்டறையில் மலை மலையாக வேலும் வாளும் குவிந்திருக்கும். இலங்கை யுத்தம் ஆரம்பமான புதிதில் கூட ஆயுதங்களுக்குக் கிராக்கியிருந்தது. இப்போது வாளையும் வேலையும் கேட்பாரில்லை. பழைய வாள்களையும் வேல்களையும், என்னிடம் கொண்டு வந்து விற்பதற்காக வருகிறார்கள். நீ கூட அதற்காகத் தான் ஒரு வேளை வந்தாயா என்ன?”
“இல்லை, இல்லை! இன்னும் சில காலத்துக்கு எனக்கு வாள் தேவையாயிருக்கிறது. ஒப்புக் கொண்ட வேலையை முடித்து விட்டால், அப்புறம் கையில் தாளத்தை எடுத்துக் கொண்டு தேவாரம் பாடிக்கொண்டு சிவ ஸ்தலயாத்திரை புறப்படுவேன். அப்போது வேணுமானால் என் ஆயுதங்களை உம்மிடமே கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன்.”