அத்தியாயம் 17 – திருநாரையூர் நம்பி (PS-3)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

மதுராந்தகத் தேவர் தமது பரிவாரங்களுடனும் வந்தியத்தேவனுடனும் பழையாறை நகருக்குள் பிரவேசித்தார். ஆரியப் படை வீடு, பம்பைப்படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு முதலான, வீரர்கள் வாழும் பகுதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது. பிறகு கடை வீதிகள், குடிமக்கள் வாழும் பகுதிகள், ஆலயங்கள், ஆலயங்களைச் சூழ்ந்திருந்த சந்நிதித் தெருக்கள் முதலியவற்றின் வழியாகச் சென்றது. ஆங்காங்கு ஒரு சிலர் வீட்டு வாசல்களில் நின்று பார்த்தார்கள். ஆனால் மக்களிடையே எவ்வித உற்சாகமும் இல்லையென்பதை வந்தியத்தேவன் கண்டான். முதன்முறை அவன் இந்நகருக்குள் வந்திருந்த போது நகரம் கோலாகலத்தில் மூழ்கியிருந்தது. இப்போது வீதிகள் ஜன சூனியமாயிருந்தன. பழையாறை பாழடைந்த நகரமோ என்று சொல்லும்படி இருந்தது. மதுராந்தகத் தேவர் மீது பழையாறை மக்கள் அவ்வளவாக விசுவாசம் கொண்டிருக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. வந்தியத்தேவனுக்கு இது ஒரு விதத்தில் சௌகரியமாயிருந்தது. தன் முகம் தெரிந்தவர்கள் யாரேனும் தன்னைப் பார்க்கும்படி நேரவும் அதனால் தொல்லை ஏற்படவும் இடமில்லையல்லவா?

இவர்கள் சோழ மன்னர்களின் புராதன அரண்மனை வீதியை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இன்னொரு பக்கமிருந்து பெரியதோர் ஊர்வலம் வந்து கொண்டிருந்ததைக் கண்டார்கள். அந்த ஊர்வலத்தின் மத்தியில் திறந்த பல்லக்கு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் இருந்தவர் யாரென்பது நன்கு தெரியவில்லையாயினும் யாரோ சிவனடியார் என்றும் இளம் பிராயத்தினர் என்றும் தோன்றியது. சிவிகைக்கு முன்னும் பின்னும் ஜனக்கூட்டம் அதிகமாயிருந்தது. கையில் தாளங்களை வைத்து இனிய ஜங்கார ஓசையை எழுப்பிக் கொண்டு சிலர் பல்லக்கின் முன்னாலும் பின்னாலும் பாடிக்கொண்டு வந்தார்கள்.

இடையிடையே “திருச்சிற்றம்பலம்” “ஹரஹரமகாதேவா!” என்ற கோஷங்களுடன் “திருநாரையூர் நம்பி வாழ்க!” “பொல்லாப் பிள்ளையாரின் அருட்செல்வர் வாழ்க!” என்ற கோஷங்களும் எழுந்து வானை அளாவின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *