அத்தியாயம் 22 – “அது என்ன சத்தம்?” (PS-3)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

ஓடையருகில் வந்ததும், படகில் வீற்றிருந்த அரசிளங்குமரி குந்தவைதான் என்பதை வந்தியத்தேவன் நன்கு தெரிந்து கொண்டான். ஆழ்வார்க்கடியான் அவ்விடத்தில் நிற்கவே, வந்தியத்தேவனும் தயங்கி நின்றான்.

“அப்பனே! ஏன் நிற்கிறாய்! இளைய பிராட்டி வெகு நேரமாய் உனக்காகக் காத்திருக்கிறார். படகில் ஏறியதும் ‘இளவரசர் வந்து விட்டார்; பத்திரமாய் இருக்கிறார்’ என்ற நல்ல சமாசாரத்தை முதலில் சொல்! உன்னுடைய வீரப் பிரதாபங்களை அளந்து கொண்டு வீண்பொழுது போக்காதே! நான் திரும்பிப் போகிறேன். பழையாறையில் இன்றைக்கு நாம் கலவரப் பிசாசை அவிழ்த்து விட்டுவிட்டோ ம். அதை மறுபடியும் பிடித்துக் கூண்டில் அடைக்க முடியுமா என்று பார்க்கிறேன். உன்னுடைய தடபுடல் சாகஸங்களினால் எத்தனை தொந்தரவுகள் நேரிடுகின்றன?” என்று ஆழ்வார்க்கடியான் சொல்லிவிட்டு, வந்தவழியாக விரைந்து திரும்பிச் சென்றான்.

வந்தியத்தேவன் மனத்தில் ஒரு பெரும் வியப்பு ஏற்பட்டது. இவன் எப்படி எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டிருக்கிறான்! இத்தனைக்கும் நம்மை ஒரு விவரமும் கேட்கவில்லை! வெறும் ஊகமா? அல்லது எல்லாம் அறிவானா? ஆண்டிகளில் பரம்பரை ஆண்டி என்றும், பஞ்சத்துக்கு ஆண்டி என்றும் இரண்டு வகை உண்டு; ஒற்றர்களிலும் அப்படி இரு வகை உண்டு போலும். நான் அவசரத்துக்கு ஒற்றன் ஆனேன்; ஆகையால் அடிக்கடி சங்கடத்தை வருவித்துக் கொள்கிறேன். இந்த வைஷ்ணவன், பரம்பரை ஒற்றன்போலும்; அதனால் ஒரு விதப் பரபரப்புமில்லாமல் சாவதானமாகத் தன் வேலையைச் செய்துவருகிறான். ஆனால் யாருக்காக இவன் வேலை செய்கிறான்? இவன் தன்னைப் பற்றிக் கூறியதெல்லாம் உண்மைதானா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *