அத்தியாயம் 3 – ஆந்தையின் குரல் (PS-3)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

நந்தினி கடலை நோக்கினாள். பழுவேட்டரையர் ஏறிச் சென்ற படகு பார்த்திபேந்திரனுடைய கப்பலை நெருங்கிக் கொண்டிருந்தது.

நந்தினி பெருமூச்சு விட்டாள். அது பார்த்திபேந்திரனுடைய நெஞ்சில் புயலாக அடித்தது.

“தேவி! சொல்லுங்கள். நான் செய்யவேண்டியது இன்னதென்று சொல்லுங்கள். தங்களுக்கும் எனக்கும் உகந்தது என்று பிரித்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தங்களுக்கு எது உகந்ததோ அதுதான் எனக்கும் உகந்தது!” என்றான் பல்லவ வீரன்.

அவன் மனத்தில் விசித்திரமான எண்ணங்கள் எல்லாம் அந்நேரத்தில் உதித்தன. இந்தப் பெண் அந்தக் கொடிய கிழவனிடம் அகப்பட்டுக்கொண்டு கூண்டுக் கிளியைப்போல் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதில் சந்தேகமில்லை. அந்தக் காட்டுப் பூனையிடமிருந்து இவளை ஏன் விடுதலை செய்யக்கூடாது? இவள் மட்டும் தன் விருப்பத்தைத் தெரிவிக்கட்டும்! அவனை அக்கப்பலிலேயே சிறைப்படுத்திக் கண்காணாத தேசத்துக்குக் கொண்டு போய்விட்டுவிடச் செய்யலாம்! சண்டாளன்! புதல்வியும், பேத்தியுமாக இருப்பதற்குரிய இளம் பிராயமுடைய பெண்ணை மனைவியாக்கிக் கொள்ள எப்படி இவன் மனந் துணிந்தது?…

நந்தினி இன்னமும் படகையும், கப்பலையும் பார்த்துக் கொண்டிருந்தாள். படகிலிருந்து பழுவேட்டரையர் கப்பலில் ஏறுவதைப் பார்த்தாள்.

“நல்லவேளை! பத்திரமாக ஏறிவிட்டார்! எவ்வளவு வீரராயிருந்தாலும் வயதாகிவிட்டதல்லவா? படகிலிருந்து கப்பலில் ஏறும்போது தடுமாறாமல் இருக்கவேண்டுமே என்று எனக்குக் கவலையாயிருந்தது!” என்றாள்.

பல்லவன் ஏமாற்றமடைந்தான்! ‘கிழவனிடம் இவளுக்கு இவ்வளவு பரிவு ஏன்? படகிலிருந்து அவன் கடலில் விழுந்து இறந்தால்தான் என்ன? நாட்டுக்கும் க்ஷேமம்; இவளுக்கும் விடுதலை! எதற்காக இவ்வளவு பரிவு காட்டுகிறாள்?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *