அத்தியாயம் 41 – மதுராந்தகன் நன்றி (PS-3)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

முதன் மந்திரியின் கரம் மதுராந்தகன் மேல் பட்டதும் அவன் அலறினான்.

“ஐயோ! அப்பா! செத்தேன்! என்னைத் தொட வேண்டாம். என் கால்கள்! போச்சு! போச்சு!”

அநிருத்தர் அவனைத் தூக்குவதை நிறுத்தி விட்டு, “இளவரசே! தங்களுக்கு என்ன நேர்ந்தது? தங்கள் கால்களுக்கு என்ன நேரிட்டது?” என்று கவலையுடன் கேட்டார்.

“என் கால்கள் முறிந்தே போய்விட்டன; நடக்க முடியவில்லை, நிற்கவும் முடியவில்லை!”

முதன் மந்திரி திரும்பிப் பார்த்து, “அடே! பல்லக்கை இவ்விடம் கொண்டு வாருங்கள்!” என்று தம் ஆட்களுக்குக் கட்டளையிட்டார்.

பின்னர், “ஐயா! இந்த விபத்து எப்படி நேர்ந்தது? தாங்கள் மழையில் தனியாகக் கிடக்கும் காரணம் என்ன? தங்களோடு வந்த பரிவாரங்கள் எங்கே? தங்களை இவ்விதம் விட்டு விட்டு அவர்கள் எப்படிப் போகத் துணிந்தார்கள்! அவர்களுக்கு என்ன தண்டனை விதித்தாலும் போதாதே?” என்றார்.

“முதன் மந்திரி! யாரையும் தண்டிக்க வேண்டாம்! யார் பேரிலும் குற்றம் இல்லை. மாலை நேரத்தில் குதிரைமேல் ஏறிக்கொண்டு நான்தான் தனியாகக் கிளம்பினேன். நதிக்கரையோரமாகப் போய்க் கொண்டிருந்தேன். திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. ஒரு பெரிய மின்னல் மின்னி இடி இடித்தது. குதிரை மிரண்டு ஓடியது. நான் இந்த மரத்தின் கிளையில் சிக்கிக்கொண்டு கீழே விழுந்து விட்டேன். குதிரை எங்கேயோ போய் விட்டது. விழுந்த வேகத்தில் கால் முறிந்து விட்டதோ அல்லது சுளுக்கிக்கொண்டு விட்டதோ தெரியவில்லை. எழுந்து நிற்கவும் முடியவில்லை, நல்ல வேளையாகத் தாங்கள் இச்சமயம் இங்கு வந்தீர்கள்!”

“ஏதோ தங்களுடைய தந்தை, மகானாகிய கண்டராதித்த தேவர் செய்த புண்ணியந்தான், இந்த மட்டும் நான் இங்கே வரும்படி நேர்ந்தது! கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருங்கள். பல்லக்கில் தங்களை ஏற்றி விடுகிறேன். மற்ற விவரங்கள் எல்லாம், நாதன்கோவிலில் அடியேனின் இல்லத்துக்குப் போன பிறகு கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்” என்றார் அநிருத்தர்.

பல்லக்கு அருகில் கொண்டு வந்து இறக்கப்பட்டதும், முதன் மந்திரி இளவரசரை மெதுவாகப் பிடித்துத் தூக்கி பல்லக்கினுள் கிடத்தினார். ஆட்களிடம், பல்லக்கைத் தூக்கிக் கொண்டு மெள்ள, மெள்ள அசங்காமல் போகவேண்டும் என்று கட்டளையிட்டார். தாமும் பல்லக்கின் அருகிலேயே தொடர்ந்தாற்போல் நடந்து சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *