Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
பழுவேட்டரையரும், பார்த்திபேந்திரனும் சேர்ந்து கடற்கரையோரமாக உலாவச் சென்ற பிறகு, நந்தினி சிறிது நேரம் தனியாக இருந்தாள். கடல் அலைகளைப் பார்த்த வண்ணம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
“ராணி அம்மா!” என்ற குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
கலங்கரை விளக்கின் காவலர் தியாக விடங்கரின் மருமகள் அங்கே நின்றாள்.
“நீ யார்?” என்று நந்தினி கேட்டாள்.
“என் பெயர் ராக்கம்மாள்!”
“எங்கே வந்தாய்?”
இதற்கு மறுமொழி சொல்லாமல் ராக்கம்மாள் நந்தினியின் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
“என்னடி பார்க்கிறாய்? என் முகத்தில் அப்படி என்ன இருக்கிறது?”
ராக்கம்மாள் திடுக்கிட்டு, “மன்னிக்க வேண்டும், அம்மா தங்களை பார்த்ததும் இன்னொரு முகம் எனக்கு ஞாபகம் வந்தது. ஆனால், அப்படி ஒரு நாளும் இருக்க முடியாது” என்றாள்.
“என்னடி உளறுகிறாய்? எது எப்படி இருக்க முடியாது?”
“அந்த ஊமை வெறியளுக்கும் தங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்க முடியாது.”
“அவள் யார் ஊமை?”
“ஈழத்தில் ஒருத்தி இருக்கிறாள்! என் மாமனாருக்குப் பெரியப்பன் மகள். சில சமயம் இங்கேயும் வருவாள்.”
“அவளுக்கும் எனக்கும் என்ன?”
“அதுதான் சொன்னேனே, உறவு ஒன்றும் இருக்க முடியாது என்று.”
“பின் ஏன் என்னைப் பார்த்ததும் அவளுடைய ஞாபகம் வந்தது?”