அத்தியாயம் 51 – மாமல்லபுரம் (PS-1)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

நேயர்கள் ஏற்கெனவே நன்கு அறிந்துள்ள மாமல்லபுரத்துக்கு இப்போது அவர்களை அழைத்துச் செல்ல விரும்புகிறோம்.

மகேந்திர பல்லவரும் மாமல்ல நரசிம்மரும் இத்துறைமுகப்பட்டினத்தை அற்புதச் சிற்பவேலைகளின் மூலம் ஒரு சொப்பனபுரியாகச் செய்த காலத்திற்குப் பிறகு இப்போது முந்நூறு ஆண்டுகளுக்கு மேலேயே ஆகி விட்டன.

நகரத்தின் தோற்றம் ஓரளவு மங்கியிருக்கிறது. மாறுதல் நம் மனத்துக்கு மகிழ்ச்சி தரவில்லை.

மாடமாளிகைகள் இடிந்து விழுந்து பாழடைந்து கிடக்கின்றன. வீதிகளிலும் துறைமுகத்திலும் முன்போல் அவ்வளவு ஜனக்கூட்டம் இல்லை. வர்த்தகப் பெருக்கமும் அவ்வளவாக இல்லை. பெரிய பெரிய பண்டக சாலைகள் இல்லை. வீதிகளிலெல்லாம் ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்கள் மலை மலையாகக் குவிந்திருக்கவில்லை.

கடல் பூமிக்குள் புகுந்து ஆழம் மிகுந்த கால்வாயாக அமைந்து கப்பல்கள் வந்து பத்திரமாய் நிற்பதற்குரிய இயற்கைத் துறைமுகமாக இருந்ததை முன்னர் பார்த்தோம். இப்போது அந்தக் கால்வாயில் மணல் அடித்து அடித்துத் தூர்ந்து போய் ஆழம் வெகுவாகக் குறைந்து போயிருக்கிறது. ஆழமற்ற அக்கடற்கழியில் சிறிய படகுகளும் ஓடங்களும்தான் வரக்கூடும். நாவாய்களும் மரக்கலங்களும் சற்றுத் தூரத்தில் கடலிலே தான் நிற்க வேண்டும். படகுகளில் வர்த்தகப் பொருள்களை ஏற்றிச் சென்று அந்த மரக்கலங்களில் சேர்ப்பிக்க வேண்டும்.

மேலே கூறிய இடைக் காலத்தில் மாமல்லபுரம் சில புதிய சிறப்புக்களையும் அடைந்திருந்ததைக் குறிப்பிட வேண்டும்.முக்கியமாக கடற்கரையோரத்தில் விளங்கிய அழகிய கற்கோயில் நம் கண்களையும் கருத்தையும் கவர்கின்றது. அது மகேந்திரன் – மாமல்லன் காலத்தில் அமைக்கப்பட்ட குன்றுகளைக் குடைந்தெடுத்த கோவில்களைப் போன்றதல்ல. குன்றுகளிலிருந்து கற்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து கட்டப்பட்ட கோயில். சமுத்திர ராஜனுடைய தலையில் சூட்டப்பட்ட அழகிய மணிமகுடத்தைப் போல் விளங்குகிறது. அடடா! அந்தக் கோயில் அமைப்பின் அழகை என்னவென்று சொல்வது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *