அத்தியாயம் 56 – அந்தப்புரசம்பவம் (PS-1)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் காஞ்சியில் மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி அரசு புரிந்த காலத்தில் நாடெங்கும் மகா பாரதக் கதையைப் படிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். பௌத்த சமண மதங்களின் பிரசாரத்தினால் மக்கள் சாதுக்களாகப் போயிருந்த தமிழ்நாட்டில் மீண்டும் வீர உணர்ச்சி தளிர்த்துப் பரவ வேண்டும் என்பதற்காக அந்த ஏற்பாடு செய்தார். பாரதக் கதை படிப்பதற்கென்றே பல ஊர்களில் பாரத மண்டபங்கள் கட்டினார். அவர் தொடங்கிய ஏற்பாடு இன்னமும் தொண்டை மண்டலத்தில் தடைப்படாமல் நடந்து வந்தது. இரவில் மக்கள் மண்டபங்களிலோ திறந்த வெளியிலோ கூடி பாரதக் கதை கேட்டார்கள். பாரதப் பெருங் கதையையும் பாரதத்திலுள்ள கிளைக் கதைகளையும் பாட்டிலும் பண்ணிலும் வசனத்திலும் அமைத்து வீராவேசத்துடன் சொல்லக் கூடிய பாடினிகள் பலர் தோன்றினார்கள்.

அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை சென்றிருந்தபோது மணிபுரியை அடுத்த வனத்தில் மணிபுரி ராஜகுமாரியான சித்ராங்கியைக் கண்டான். இருவரும் காதல் கொண்டார்கள். சித்ராங்கிக்கு அரவான் என்னும் அருமைப் புதல்வன் பிறந்தான். மலைநாட்டுக் கோமகளுக்கு அர்ச்சுனனால் பிறந்த மகனாதலால் அரவான் மகா வீரனாயிருந்தான். பாரத யுத்தம் நடக்கப் போகிறது என்று அறிந்து அவனும் பாண்டவர் படையில் சேர வந்து சேர்ந்தான். போர் தொடங்குவதற்கு முன்னால் சகல இலட்சணங்களும் பொருந்திய மகா வீரனான இளைஞன் ஒருவனைக் களபலி கொடுக்க வேண்டும் என்ற பேச்சு வந்த போது, “இதோ நான் இருக்கிறேன்; என்னைக் களபலியாகக் கொடுங்கள்!” என்று அரவான் முன் வந்தான். அவனைக் காட்டிலும் சிறந்த வீரன் யாரும் பாண்டவர் பக்கத்தில் இல்லாதபடியால், தானாக முன் வந்த அரவானையே பலி கொடுக்க வேண்டியதாயிற்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *