அத்தியாயம் 57 – மாய மோகினி (PS-1)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

ஆரம்பத்திலிருந்து அவ்வளவாக அனுதாபம் இல்லாமலே கரிகாலன் கதையைக் கேட்டுக் கொண்டு வந்த பார்த்திபனுக்கும் இப்போது நெஞ்சு உருகி விட்டது. தன்னுடைய கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

“அரசே! ஒரு பெண்ணின் பேரில் ஏற்பட்ட காதலினால் இப்படிப்பட்ட துன்பம் உண்டாகக் கூடும் என்று நான் கனவிலும் கருதியதில்லை! இளவரசுப் பட்டாபிஷேகம் நடந்த அன்று இப்படி ஓர் அனுபவம் தங்களுக்கு நேர்ந்தது என்று எங்களுக்கெல்லாம் தெரியாது. ஆகையால், தாங்கள் மனச்சோர்வுடன் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டோம். என்னவெல்லாமோ பரிகாசப் பேச்சுகள் பேசித் தங்களைச் சந்தோஷப்படுத்தப் பார்த்தோம். அதெல்லாம் இப்போது எனக்கு நினைவு வருகிறது!” என்றான்.

“ஆம்; நீங்கள் பரிகாசப் பேச்சுப் பேசினீர்கள். என்னை உற்சாகப்படுத்தப் பார்த்தீர்கள். என்னுடைய ஆட்சிக் காலத்தில் நான் செய்யப் போகும் மகத்தான காரியங்களைப் பற்றி பேசினீர்கள். இலங்கையிலிருந்து இமயம் வரையில் சோழ சாம்ராஜ்யத்தை அன்றைய தினமே விஸ்தரித்து விட்டீர்கள்! இன்னும், கடல் கடந்து சென்றும் இராஜ்யங்களைக் கைப்பற்றினீர்கள். அந்தப் பேச்செல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவ்வளவும் எனக்கு எவ்வளவு துன்பமளித்தது என்பதும் நினைவிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *