அத்தியாயம் 44 – நந்தி வளர்ந்தது! (PS-3)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

படகு அப்போது சென்று கொண்டிருந்த இடத்தில் கால்வாயின் கரைகள் இருபுறமும் ஓங்கி உயர்ந்திருந்தன. பூங்குழலி சுட்டிக் காட்டிய இடத்தில் கால்வாயின் ஓரமாகப் படித்துறை மண்டபம் ஒன்று காணப்பட்டது. படிகள் முடிந்து மண்டபம் தொடங்கும் இடத்தில் இரண்டு ஓரங்களிலும் இரண்டு நந்தி விக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறந்த வேலைப்பாட்டுடனும் ஜீவகளையுடனும் விளங்கிய அந்த நந்திபகவானுடைய சிலைகளை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இந்தச் சிலைகளின் முக்கியம் பற்றியே அம்மண்டபத்துக்கு ‘நந்தி மண்டபம்’ என்ற பெயர் ஏற்பட்டிருந்தது. வருஷத்துக்கு ஒரு முறை வஸந்த உற்சவத்தின் போது திருநாகைக்காரோணத்துக் காயாரோகண சுவாமியும் நீலாய தாட்சி அம்மனும் அந்த மண்டபத்திற்கு விஜயம் செய்து கொலு வீற்றிருப்பது வழக்கம். அப்போது மக்கள் திரள் திரளாக அங்கே வந்து சேர்வார்கள். உற்சவம் பார்த்துவிட்டு நிலா விருந்தும் அருந்தி விட்டுத் திரும்பிச் செல்வார்கள். நகரத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்தபடியால், மற்ற சாதாரண நாட்களில் இங்கே ஜனங்கள் அதிகமாக வருவதில்லை.

படகு, மண்டபத்தை நெருங்கியது. மண்டபத்தில் இருந்த இரு பெண்மணிகளையும் பார்த்த பிறகு இளவரசனுக்கு வேறு எதிலும் பார்வையும் செல்லவில்லை; கவனமும் செல்லவில்லை. படகு நெருங்கி வந்தபோது, இளையபிராட்டி குந்தவை படிகளில் இறங்கிக் கீழ்ப்படிக்கு வந்தாள். வானதியோ மண்டபத்திலேயே தூண் ஒன்றின் பின்னால் பாதி மறைந்தும் மறையாமலும் நின்று கொண்டிருந்தாள்.

படித்துறை அருகில் வந்து படகு நின்றது. இளவரசன் இறங்குவதற்குப் படகிலிருந்தபடி சேந்தன் அமுதனும், படியில் நின்றபடி இளைய பிராட்டியும் உதவி செய்தார்கள்.

சேந்தன் அமுதனும், பூங்குழலியும் படகைப் பின்னோக்கிச் செலுத்திக் கொண்டு போய்ச் சிறிது தூரத்தில் நிறுத்தினார்கள்.

“தம்பி! எப்படி மெலிந்து விட்டாய்!” என்று குந்தவை கூறியபோது, அவளுடைய கனிந்த குரலிலே கண்ணீர் கலந்து தொனித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *