Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
“அக்கா! ஐந்து வயதில் நான் காவேரி வெள்ளத்தில் மூழ்கியது நினைவிருக்கிறதா? காவேரித் தாய் என்னை எடுத்துக் காப்பாற்றிப் படகிலே விட்டு விட்டு மறைந்தது நினைவிருக்கிறதா?” என்று அருள்மொழிவர்மன் கேட்டான்.
“இது என்ன கேள்வி, தம்பி! எப்படி அதை நான் மறந்து விடமுடியும்? ‘பொன்னியின் செல்வன்’ என்று உன்னை அழைத்து வருவதே அந்தச் சம்பவத்தின் காரணமாகத் தானே?” என்றாள் குந்தவை.
“என்னைக் காப்பாற்றிய காவேரித் தாயை இலங்கையில் நான் கண்டேன், அக்கா!.. என்ன, பேசாதிருக்கிறாயே? உனக்கு ஆச்சரியமாயில்லை?”
“ஆச்சரியமில்லை, தம்பி. ஆனால் ஆர்வம் நிறைய இருக்கிறது. அவளைப் பற்றி எல்லா விவரங்களையும் சொல்!”
“ஒரு நாளில், ஒரு தடவையில், சொல்ல முடியாது. முக்கியமானதை மட்டும் சொல்லுகிறேன். காவேரி வெள்ளத்திலிருந்து என்னை அவள் காப்பாற்றியது மட்டுமல்ல; இலங்கையில் பல தடவை என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறாள். உயிரைக் காப்பாற்றியது பெரிதல்ல, அக்கா! எத்தனையோ பேர் தற்செயலாகப் பிறர் உயிரைக் காப்பாற்றுகிறார்கள். அவள் என்னிடத்தில் வைத்துள்ள அன்பு இருக்கிறதே, அதற்கு இந்த ஈரேழு பதினாலு உலகங்களும் இணையாகாது… ஏன்? நீ என்னிடம் வைத்துள்ள அன்பைக் கூட, அடுத்தபடியாகத்தான் சொல்ல வேண்டும்!”
“அதைச் சொல்வதற்கு நீ தயங்க வேண்டாம். உன்னிடம் என் அன்பு அவ்வளவு ஒன்றும் உயர்ந்தது அல்ல; சுயநலம் கலந்தது. உண்மையைச் சொல்கிறேன், தம்பி! எனக்கு இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் மேன்மைதான் முதன்மையானது. அதற்கு நீ பயன்படுவாய் என்றுதான் உன்பேரில் அன்பு வைத்திருக்கிறேன். அந்த நோக்கத்துக்கு நீ தடையாயிருப்பாய் என்று தெரிந்தால், என் அன்பு வெறுப்பாக மாறினாலும் மாறிவிடும். ஆனால் அந்த ஊமைச் செவிட்டு ஸ்திரீயின் அன்பு அத்தகையதல்ல. நம்முடைய தந்தையிடம் இருபது வருஷங்களுக்கு மேலாக அவள் உள்ளத்தில் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்த அத்தனை அன்பையும் உன் பேரிலே சொரிந்திருக்கிறாள். அதற்குப் பதினாலு உலகமும் இணையில்லைதான்!”