Ponniyin Selvan Audio Book Tamil Rejiya
நந்தி மண்டபத்தில் அமர்ந்து இளவரசனும், குந்தவை தேவியும் பேசிக்கொண்டிருந்தபோது – வானதி தூண் ஓரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்தபோது, – கால்வாயில் படகில் காத்துக் கொண்டிருந்த பூங்குழலிக்கும், சேந்தன்அமுதனுக்கும் முக்கியமான சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது.
“அமுதா! ஒன்று உன்னை நான் கேட்கப் போகிறேன். உண்மையாகப் பதில் சொல்வாயா?” என்றாள் பூங்குழலி.
“உண்மையைத் தவிர என் வாயில் வேறு ஒன்றும் வராது பூங்குழலி! அதனாலேதான் நாலு நாளாக நான் யாரையும் பார்க்காமலும், பேசாமலும் இருக்கிறேன்” என்றான் அமுதன்.
“சில பேருக்கு உண்மை என்பதே வாயில் வருவதில்லை. இளவரசருக்கு ஓலை எடுத்துக் கொண்டு இலங்கைக்குப் போனானே, அந்த வந்தியத்தேவன் அப்படிப்பட்டவன்.”
“ஆனாலும் அவன் ரொம்ப நல்லவன். அவன் யாரையும் கெடுப்பதற்காகப் பொய் சொன்னதில்லை.”
“உன்னைப் பற்றி அவன் ஒன்று சொன்னான். அது உண்மையா, பொய்யா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்…”
“என்னைப் பற்றி அவன் உண்மையில்லாததைச் சொல்வதற்குக் காரணம் எதுவும் இல்லை. இருந்தாலும், அவன் சொன்னது என்னவென்று சொல்!”
“நீ என்னைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியதாகச் சொன்னான்.”
“அது முற்றும் உண்மை.”
“நீ என்னிடம் ஆசை வைத்திருப்பதாகச் சொன்னான், என்னை நீ மணந்து கொள்ள விரும்புவதாகச் சொன்னான்….”
“அவ்விதம் உண்மையில் அவன் சொன்னானா?”
“ஆம், அமுதா!”
“அவனுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.”
“எதற்காக?”
“நானே உன்னிடம் என் மனதைத் திறந்து தெரிவித்திருக்க மாட்டேன்; அவ்வளவு தைரியம் எனக்கு வந்திராது. எனக்காக உன்னிடம் தூது சொன்னான் அல்லவா? அதற்காக அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.”
“அப்படியானால் அவன் சொன்னது உண்மைதானா?”